மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா.. சாட்டிலைட் மூலம் சூழ்ச்சியை பிடித்த இந்தியா.. சீனாவின் புது ரூட்..
- இந்தியாவின் வடக்கு எல்லையில், காஷ்மீரின் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக சீனா புதிய சாலை அமைத்துள்ளது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் பின்னணி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
- பல ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது, இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனை..அதிலும் இந்தியாவிற்குரிய இடங்களை உரிமைக்கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள சீனா...தொடர்ந்து பல்வேறு விதமான அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது..
- அந்த வகையில் தற்போது இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் புதிய சாலை ஒன்று அமைத்து மீண்டும் சீண்டலை தொடங்கியுள்ளது சீனா.
- சீனாவின் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
- பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலையை அமைத்துள்ளது சீனா.
- சீனாவின் சின் ஜியாங்கில் உள்ள ஜி219 நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பகுதியில் இருந்து, இந்தியாவின் வடக்கு புள்ளியில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறை அருகே மலைகளில் மறைகிறது இந்த புதிய சாலை..
- இந்த சாலை கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் போடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
- இந்தியாவின் வடக்கு எல்லையில் அரசியல் ரீதியாக முக்கிய இடமாக கருதப்படும் சர்ச்சைக்குரிய ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கின் முந்தைய வரலாறு இவ்விவகாரத்தின் தாக்கத்தை உணர்த்துகிறது.
- சுமார் 5 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இப்பகுதி, பிரிவினைக்கு பின் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டது.
- இதன்பின்னர்1963ல் பாகிஸ்தான்- சீனா இடையே நடைபெற்ற எல்லை உடன்படிக்கையில் இந்த பகுதியை சீனாவிற்கு விட்டுக்கொடுத்தது பாகிஸ்தான்.
- ஆனால், இந்தியாவிற்குரிய பகுதியை ஆக்கிரமித்து அதனை இந்தியாவின் ஒப்புதலின்றி சீனாவுக்கு தாரைவார்த்தது செல்லாது என்று கூறிய இந்தியா, பாக்.,- சீன எல்லை உடன்படிக்கையை அங்கீகரிக்கவில்லை.
- இந்நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்தான பிறகு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்ட இந்திய வரைப்படத்திலும் இப்பகுதி இந்திய கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.
- அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியில் சட்டவிரோதமாக சீனா சாலை அமைத்துள்ளது அரசியல் அச்சுறுத்தலாக மட்டுமன்றி, பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது.
- சாலை அமைப்பது போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களால் காஷ்மீரின் பாதுகாப்புச் சூழல் மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
- இதனால் சீனாவின் அடுத்தடுத்த சீண்டல்களுக்கு, முட்டுக்கட்டை போடும் வகையில், இந்திய அரசு ராஜாங்க ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த வேண்டும் என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.