அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க திட்டம்..கோதாவில் இறங்கும் டிரம்ப் - கடும் ஆத்திரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ
அமெரிக்காவுடன் கனடாவை இணைக்க திட்டம்..பதவியேறும் முன்னரே கோதாவில் இறங்கும் டிரம்ப் - கடும் ஆத்திரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ..பரபரப்பு பின்னணி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலை அடுத்து, அமெரிக்காவின் 51 வது மாகாணமாக கனடா இணைந்துவிடலாம் எனக்கூறி மீண்டும் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறார் விரைவில் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப். இதுபற்றி அலசுகிறது
பின்வரும் தொகுப்பு...
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வரும் ஜனவரி
20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். பதவியேற்புக்கு முன்பாகவே
பல்வேறு அதிரடி கருத்துக்களை கூறிவரும் டிரம்ப், அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என
தொடர்ந்து பல முறை வலியுறுத்தி வருகிறார்.
அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியில் நிலவும் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்காவிட்டால் கனடா பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த சூழலில், சொந்த கட்சிக்குள்ளேயே வலுத்த எதிர்ப்பு, கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், லிபரல் கட்சி தலைவர் பதவியையும், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக 53 வயதான பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் அறிவித்தார்.
ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில், தற்போது
ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவு மீண்டும் பரபரப்பை
பற்ற வைத்துள்ளது.
அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைவதை கனடாவில் வசித்து வரும் பலரும் விரும்புகிறார்கள் என்றும், வர்த்தக ரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளதாகவும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும்.
ரஷ்யா மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து
முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்றும்
டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது.
நாம் தான் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம்.
சலுகைகள் கொடுக்கிறோம். இனி இதெல்லாம் கிடைக்காது
என்பதை அறிந்தே ட்ரூடோ பதவி விலகியிருப்பதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.
ஆனால், கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறும் என்பது
ஒருபோதும் நடக்காது என்று ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், கனடாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது
என்பதை புரிந்துகொள்ளாமல் டிரம்ப் பேசி வருவதாகவும், தங்கள் மக்கள் வலிமையானவர்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி Melanie Joly காட்டமாக தெரிவித்துள்ளார்.