அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீசை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவந்தார்.. அமெரிக்காவில் வழக்கமாக குடியரசு கட்சி ஆதிக்கம் செலுத்தும் Red State மாகாணங்களில் டிரம்ப் வெற்றியை வசமாக்கினார். அதேபோல், மக்கள் வழக்கமாக ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் Blue மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றியை வசமாக்கினார். இதனால் அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் 93 வாக்குகளை கொண்ட ஸ்விங் மாகாணங்களில் யார் கை ஓங்கும் என எதிர்பார்ப்போடு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்படைந்தது. இதில் அதிகபட்சமாக 19 வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா, 16 வாக்குகளை கொண்ட வடக்கு கரோலினா, ஜார்ஜியாவில் டிரம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்டதும், அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் அரியணையை உறுதி செய்துவிட்டார். மொத்தம் உள்ள 538 எலக்ட்டோரல் குழு வாக்கில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், 277 வாக்குகளை வசமாக்கியிருக்கும் டிரம்ப் வெற்றியை உறுதி செய்திருக்கிறார். கமலா ஹாரிஸூக்கு 224 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் தோல்வி அடைந்தார்.