பள்ளியில் விஜய் படத்தை வைத்து கல்லா கட்டிய டீச்சர்கள்.. பேரதிர்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை

Update: 2024-11-13 03:49 GMT

பள்ளிக்கூடத்தில், ஸ்மார்ட் வகுப்பறை என்ற பெயரில் பாடம் படிப்பதை விட்டுவிட்டு, ஸ்மார்ட் சினிமா தியேட்டராகவே மாற்றி வசூல் வேட்டையில் செய்து கல்லாக் கட்டிய பள்ளி ஆசிரியர்கள் குறித்து பார்க்கலாம்.. விரிவாக..

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 1,700 பேர் படிக்கும் இந்த பெண்கள் பள்ளியில், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் சினிமா போட்டுக் காட்டப்பட்டுள்ளது...

மாணவிகளை குஷிப்படுத்துவதற்காக எனக் கூறிக் கொண்டு, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான Goat படத்தை மதிய நேரத்தில், திரையிட்டு இருக்கிறார்கள், இந்த பள்ளியின் ஆசிரியர்கள்..

இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்தையும் திரையிட்டு மாணவிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்கள் பள்ளியின் ஆசிரியர்கள்..

படம் போட்டு காட்டிய ஆசிரியர்களே, தங்களுக்கு இதில் ஏதேனும் லாபம் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என யோசித்து சுமார் 600 மாணவிகளிடமும் விஜய் படத்திற்கு 20 ரூபாயும், ரஜினி படத்துக்கு 10 ரூபாயும் வசூலித்து கல்லா கட்டியிருக்கிறார்கள்...

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்களையும் இந்த ஆசிரியர்கள் விட்டு வைக்கவில்லை.. இப்படியாக, சுமார் 21 ஆயிரம் வரை வசூலித்து இருக்கிறார்கள். இதனிடையே பள்ளியில் சினிமா பார்த்த விஷயம் இணையத்தில் பரவ விவகாரம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

தியேட்டர்களைப் போல, பள்ளிக்கூடத்தில் இந்த 2 திரைப்படங்களையும் திரையிடுவதற்கு ஏதேனும் உரிமம் பெற்றுள்ளார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை பலர் எழுப்பியிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரின் உத்தரவின் பேரில், கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, மாணவிகளுக்கு மன அளவிலான அழுத்தத்தைப் போக்கும் விதமாகவே, இப்படி சினிமா திரையிடப்பட்டதாகவும், மாணவிகளின் பணத்தை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருப்பதாகவும் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விளக்கியுள்ளார்.

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாலே, அந்த நாளை ஈடு செய்வதற்காக மற்றொரு நாளில் பள்ளிகள் செயல்படும் என அரசு அறிவிப்புகளை வெளியிடும் இதே காலத்தில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்