கடலூரை பரபரப்பாக்கிய தவாக பிரமுகர் கொலை - கொலையாளி வீட்டிற்கு தீ... 4 நாட்களாக பிணவறையில் சடலம்
கடலூரில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் படுகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்துவதால் பெரும் பரபரப்பு நிலவியது.
கடலூர் சான்றோர் பாளையத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரதிநிதி சங்கர் என்பவர் 1ம் தேதி நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். சங்கர் கொலை முன் விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் இதில் தொடர்புடைய சதீஷ் மற்றும் அன்பு ஆகிய இருவரையும் பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு காரணமான சதீஷின் வீட்டை சங்கர் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அவரது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 2ம் தேதி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தை சங்கர் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என உறுதி அளித்ததின் பேரில் அந்த முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சம்பவம் நடந்து 4 நாள்கள் ஆகியும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் 4வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.