"இனி மரண தண்டனை" - குற்றவாளிகளை நடுநடுங்கவிடும் தமிழக அரசின் புதிய சட்டதிருத்த மசோதா
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்திருக்கும் மசோதாவில் பல்வேறு குற்றங்கள் பட்டியலிடப்பட்டு, அதற்கான தண்டனை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 10 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. இப்போது அதனை 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனையாக அதிகரிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் அல்லது அவரது நெருங்கிய உறவினர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை என இருப்பது, 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிக்கு 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் அல்லது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கலாம் என இருக்கும் விதி, தற்போது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்பவருக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் விதி, இப்போது மரண தண்டனை விதிக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கலாம் என்ற விதி, மரண தண்டனை விதிக்கலாம் மாற்றப்பட்டுள்ளது.
குறித்த சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 2 ஆண்டு சிறை என உள்ளது, அதனை 3 முதல் 5 ஆண்டு வரையில் நீட்டிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல்களுக்கு ஒராண்டு சிறை தண்டனை என்ற விதி, 3 ஆண்டு சிறை என திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
பாலியல் தொல்லை குற்றங்களுக்கு 3 ஆண்டு சிறை என்பது 5 ஆண்டு சிறை என மாற்றப்பட்டுள்ளது.
பெண்ணின் ஆடையை அகற்றுதல் போன்ற தாக்குதலுக்கு 3 முதல் 7 ஆண்டு வரையிலான சிறை தண்டனை, இப்போது 5 முதல் 10 ஆண்டு சிறை என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெண்ணை பின் தொடர்தல் குற்றத்தை முதலில் செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும், 2 ஆவது முறை செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மீது அமிலம் வீசும் குற்றங்களுக்கு 10 ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை என இருக்கும் விதி, இப்போது ஆயுள் முதல் மரண தண்டனை என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மீது அமிலம் வீச முயற்சி செய்யும் குற்றங்களுக்கு 5 முதல் 7 ஆண்டு வரை சிறை என்பது, 10 ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை என்று அதிகரிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.