பல்லடம் மூவர் கொலைச் சம்பவத்தால் பதற்றம்.. “ஊருக்குள் வரத் தடை போட்ட மக்கள் “
பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில், கடந்த நவம்பர் 29ஆம் தேதி தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகிய மூவர் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், 14 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், கொலை நடந்து 14 நாள்கள் ஆகியும் குற்றவாளிகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில், கண்டியன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்குள் நுழைய தடை எனவும், அடையாளம் தெரியாத நபர்களை வைத்து வீடு மராமத்து பணி மற்றும் கிணறுகளை தூர்வாரும் பணி செய்வதை தவிர்ப்போம் எனவும் பதாகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடவே, பழைய துணி வாங்குபவர்கள்.. பெட்ஷீட், போர்வை விற்பனை செய்பவர்கள் ஊருக்குள் நுழைய தடை என தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.