ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் பகுதியில் தான், இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
பெற்ற தந்தையால், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு, 70 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி திருமலைச்செல்வன் - சுகன்யா.
இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் நிகில் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில், திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இந்த சூழலில் தான், சுகன்யா தனது 2 குழந்தைகள் உடன் ஒரு மாதத்திற்கு முன்பாக தனது தாயின் வீட்டிற்கு கோபத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து... குழந்தைகளுக்காக, சாயப்பட்டறையில் சென்று வேலைப்பார்த்து வந்த சுகன்யாவையும், தனது குழந்தைகளையும் காண்பதற்காக அவரது கணவர் வந்ததில்தான் இந்த அசம்பாவிதம்..
கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த திருமலைச்செல்வன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீதும் ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.
இதனால், சுகன்யா தனது குழந்தைகளை காப்பாற்றிக் கொள்ள அலறியடித்து கொண்டு, கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடோடி வந்து தீயை அணைத்திருக்கின்றனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக 4 வயதே ஆன ஆண் குழந்தை நிகிலின் மீது தீப்பற்றி மள மளவென எரியத் தொடங்கியுள்ளது.
இதனால், குழந்தை உடல் தீப்பற்றி எரிந்ததில், குழந்தை கதறி அங்கும் இங்குமாக ஓடி துடித்திருக்கிறது.
நெருப்பை அணைப்பதற்குள், குழந்தை 70 சதவீதம் தீக்காயமடைந்தது அனைவரின் மனதையும் வேதனை அடைய செய்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.