பூட்டு உடைப்பு.. மாறி மாறி ஏட்டிக்கு போட்டியாக டிஸ்மிஸ்? - என்ன நடக்கிறது தமிழ் பல்கலைக்கழகத்தில்?

Update: 2024-12-31 03:13 GMT

தஞ்சை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், புதிய பொறுப்பு பதிவாளராக வெற்றிச்செல்வன் பொறுப்பேற்று கொண்டார்.

தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய பொறுப்பு பதிவாளராக, துணைவேந்தர் நியமித்த முனைவர் வெற்றிச்செல்வன் பொறுப்பேற்றார்.

ஏற்கனவே, தற்காலிக பதிவாளராக இருந்த தியாகராஜனும், பொறுப்பு துணைவேந்தரான சங்கரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி, ஒருவரை ஒருவர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியது. இதனிடையே, பதிவாளரின் உள் அறையை பதவி நீக்கம் செய்யப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டி விட்டு சென்றார்.

இதனால், சுமார் 3 மணி நேரம் வரை, பதிவாளரின் உள் அறைக்கான சாவி இல்லாமல் தவிப்புக்கு உள்ளாகினர். இங்கு வல்லம் டிஎஸ்பி அன்பரசன் தலைமையிலான போலீசார் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், பூட்டு உடைக்கப்பட்ட பின்னர், புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் பொறுப்பேற்றார்.

முன்னாள் பதிவாளரான தியாகராஜன், இது சிறுபிள்ளைத்தனமான செயல் என்று விமர்சித்தார்.

புதிய பதிவாளராக வெற்றிச்செல்வன் நியமனம் குறித்து விளக்கிய பல்கலைக்கழகப் பொறுப்பு துணைவேந்தர் சங்கர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பாக உள்ள வழக்கில் வரும் ஜனவரி 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள சூழலில், விசாரணையில் ஏற்படும் இடையூறை தவிர்ப்பது உள்ளிட்டவைகளால், தியாகராஜனை நீக்கி விட்டு, புதிய பதிவாளராக வெற்றிச்செல்வனை பொறுப்பாக நியமனம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாகவே, மாணவர்களிடம் நடந்து கொண்ட அணுகுமுறை காரணமாக, இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு போனதாக கூறுகிறார், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர், தியாகராஜன்..

இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து உள்ளதாக தெரிவித்தார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கர்..

இந்த பிரச்சனைகளுக்கு நடுவே, ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் எவ்வித பிரச்சனையும் வராமல் இருக்கு புதிய பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜனை பணியிடம் நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் துணைவேந்தர்.

Tags:    

மேலும் செய்திகள்