சேலத்தில் விடாது பெய்த மழை.. ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி...! | Salem
சேலத்தில் தொடர் மழை காரணமாக, போடிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் அருகே போடிநாயக்கன்பட்டி, ஆண்டிபட்டி, கரட்டூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் போடிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து மாநகருக்குள் சென்று வந்தனர். 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சுரங்கப்பாதை மிகவும் குறுகலாக இருந்ததால், அகல சுரங்கப்பாதை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, கடந்த 2018ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்த கனமழை காரணமாக ரயில்வே சுரங்க பாதையின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. இதனால் இந்த சுரங்கப்பாதையை தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறை அதிகாரிகள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.