விமானம் கிளம்பும் முன்னே அறிகுறி.. கரிக்கட்டையாய் போன 18 உயிர்கள் - கதிகலங்க வைக்கும் கடைசி நிமிடம்

Update: 2024-07-25 04:26 GMT

19 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம் ஒன்று, கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த கோரக் காட்சிகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன..

இந்த கோரச் சம்பவம் அரங்கேறியது நேபாளத்தில்.. பொதுவாகவே நேபாளத்தில் வான்வழி பயணம் என்றால் கதிகலங்கவே செய்யும்..

ஏனெனில், நேபாளில் ஆண்டுக்கு ஒரு விமான விபத்து என்ற சோகச் செய்தியை கண்டிட முடியும்..

இந்நிலையில், தான் மற்றொரு கோரம் அரங்கேறி இருக்கிறது.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா என்ற நிறுவனத்தின் விமானம் பிரபல இமாலய சுற்றுலா தலமான போக்ரா நோக்கி புறப்பட்டது..

விமானத்தில் 19 பேர் பயணித்த நிலையில், அதில் ஒருவர் கூட அதுவே தங்களின் கடைசி பயணம் என தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியது...

சுதாரிப்பதற்குள் கீழே விழந்த விமானம், கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது...

சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, மொத்த விமானமும் கரிக்கட்டையானது...

மளமளவென பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வர விமானி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

ஆனால் விமானத்தில் இருந்த மற்ற 18 பேரும் தீக்கிரையாகி சடலமாகவே கண்டெடுக்கப்பட்டனர்...

உடல்கள் மிக மோசமாக கருகிய நிலையில் இருப்பதாலும், அவற்றை விமானத்தின் நொறுங்கிய பாகங்களிலிருந்து தனியாக எடுப்பதும் சிரமமானதாக இருக்கிறது என்ன சொல்லப்படுகிறது.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது...

விபத்து நடந்த திரிபுவன் சர்வதேச விமான நிலையம், உலகிலேயே மிக ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்று என்றும் இங்கு விமானத்தை இயக்க அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

மற்ற நாடுகளை விட நேபாளத்தில் மலைகள், சிகரங்கள், பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால், இங்கு வான்வழி பயணம் சவாலான ஒன்றே.. நிமிடத்திற்கு நிமிடம் காலநிலையும் கண்கட்டி வித்தை காட்டும்...

இதனால் கைத்தேர்ந்த விமானிகள் விமானங்கள் இயக்கினால் மட்டுமே பிழைக்க முடியும்.

ஆனால் நேபாள விமான சேவையில் போதிய பயிற்சியின்மை மற்றும் பராமரிப்பு இல்லாததே இது போன்ற விபத்துகளுக்கு வழிவகுப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்...

இதனால், 2010ல் இருந்து தற்போது வரை கோரமான முறையில் 12 விமான விபத்துகள் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கின்றனர் விவரமறிந்தவர்கள்...

இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியம் நேபாளத்தின் வான்வழி சேவைகளை முற்றிலுமாக தடை செய்துள்ளது.

2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கூட போக்ராவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர். இப்படி ஆண்டுக்கு ஒருமுறை பல உயிர்கள் மாய்ந்து பாடம் கற்பித்தாலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நேபாள அரசு மேற்கொள்ளவில்லை என பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் உரிய விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்ற நிலையில், இனியாவது விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்