`AI’ கேமராவை பார்த்ததும் புறமுதுகை காட்டி ஓடிய ஆட்கொல்லி சிறுத்தை -வைரலாகும் குபீர் வீடியோ
நடுக்காட்டில் கெத்தாக உலாவிய சிறுத்தையை வாலை சுருட்டிக் கொண்டு ஓட வைத்த ஏஐ தொழில் நுட்பம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..
நடுக்காட்டில் பதுங்கி வந்த சிறுத்தை, கேமராவின் கண்களில் பட, அடுத்த நிமிடம் அங்கு நடந்தது நம்ப முடியாததாக இருந்தது.
வேலூர் மாவட்டம் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிராமான கே. வி.குப்பம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண்ணை கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது
இதனைத் தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்க மாவட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய கேமரா பொருத்தியதோடு, கூண்டுகளையும் வைத்தனர். ஆனாலும் சிறுத்தையைக் கண்டு பிடிக்க முடியாததால் மாவட்ட நிர்வாகம் ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்தது.
தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் மூலம் ஏஐ தொழில்நுட்பம் அடங்கிய கேமராவை சிறுத்தை நடமாடக் கூடிய பகுதிகளில் வனத்துறை பொருத்திக் கண்காணித்து வந்தனர். அப்படி குடியாத்தம் காந்திகணவாய் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் சிறுத்தை ஒன்று பதுங்கி நடந்து வரும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் ஒரு நிமிடம் நின்ற சிறுத்தை, சுற்றும் முற்றும் பார்த்தது, பின்னர் தலையைத் தூக்கிப் பார்த்த போது அங்கிருந்து வந்த துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டு வாலை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
சிறுத்தை வந்து சென்ற காட்சிகள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வர உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஏஐ தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட கேமராவில் அசையும் எந்த பொருளையும் உடனடியாக உணரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்பு அந்த பொருள் உயிரற்றவையா அல்லது உயிருள்ளவையா என்பதைக் கண்டறிகிறது. பின்னர் உயிருள்ளவை என்றால் அது எந்த வகை உயிரினம் என்பதை முடிவு செய்து காட்டு விலங்கு என்பது உறுதி செய்தவுடன் அவைகளை அச்சுறுத்தக் கூடிய வகையில் பக்கத்திலிருக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி மூலம் சத்தங்கள் எழுப்பப்படுகின்றன.
தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம், ஆம்புலன்ஸ் ஒலி, வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன் ஒலி என ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒலிகளைப் பயன்படுத்தி விலங்குகளை விரட்டும் வேலையை ஏஐ கேமரா செய்தது அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது.
சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது அதன் கால் தடங்களைப் பார்ப்பது கூண்டு வைப்பது என ஒரு வாரம் தேவைப்படும் மனித முயற்சிகளின்றி எளிதாகப் பல வகையான சத்தங்களை எழுப்பி சில நிமிடத்தில் ஏஐ கேமரா சிறுத்தைகளைக் காட்டுக்குள் விரட்டுவது புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் வனத்துறையில் ஏஐ தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.