இனி கேரளா போக வேண்டாம்.! - தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக.. நீரில் மிதக்கும் ஹோட்டல் | Boat House

Update: 2025-01-09 02:28 GMT

கேரள படகு இல்லங்களை போலவே, தமிழ்நாட்டின் முதல் மிதவை உணவகம் சென்னை முட்டுக்காட்டில் தொடங்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் குறித்து விவரிக்கிறது, பின்வரும் தொகுப்பு...

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக முட்டுக்காடு இருந்துவருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, முட்டுக்காடு படகு குழாமில் தமிழ்நாட்டின் முதல் மிதவை உணவக படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதவை உணவகம், கேரளாவின் படகு இல்லங்களைபோல் சுற்றுலா பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுடன், இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த படகில், ஒரே நேரத்தில் 100 நபர்கள் அமர்ந்து உணவருந்த முடியும்.

தண்ணீருக்கு நடுவே மிதக்கும் இந்த நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டம், கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள், கேளிக்கை விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என சுற்றுலா வளர்ச்ச்சி துறை தெரிவித்துள்ளது.

இந்த சேவை தினமும் இரவு 7 மணி முதல் 11 மணி வரை அனுமதிக்கப்படும் என்றும், படகு குழாமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வரை, 2 மணி நேரம் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதவை உணவகத்தில் முதல்கட்டமாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, முன்பதிவு நடைபெற்று வருகிறது. பயண கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தமிழ்நாட்டில் மற்ற இடங்களிலும் இதுபோன்ற படகு உணவகம் தொடங்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்