1 சர்ஜரிக்கே ரூ.15 லட்சமாகும்.. ஆனால் 76 குழந்தைகளுக்கு பைசா செலவில்லாமல் நடந்த அதிசயம்..
1 சர்ஜரிக்கே ரூ.15 லட்சமாகும்.. ஆனால் 76 குழந்தைகளுக்கு பைசா செலவில்லாமல் நடந்த அதிசயம்.. அரசின் வரப்பிரசாத திட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 76 ஏழை குழந்தைகளுக்கு, பிறவி செவித்திறன் குறைபாடுகளை சரிசெய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், பிறவி செவித்திறன் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு "காக்ளியர் இம்பிளான்ட்" என்ற நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 76 குழந்தைகளுக்கு பிறவி செவித்திறன் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகளுக்கு தொடர்ந்து பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் "காக்ளியர் இம்பிளான்ட்" அறுவை சிகிச்சைக்கு 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்றும், ஆனால் இங்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அறுவை சிகிச்சையால், தங்கள் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சிகிச்சை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.