சென்னை - நெல்லை இடையே டெல்டா மாவட்டங்கள் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில், வரும் 9, 16, 23 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில், வரும் 10, 17, 24 ஆகிய தேதிகளில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர் வழியாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளை கடந்து சென்னை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.