தென் மாவட்டங்களை சிதைத்த சுழற்சி.. தப்பித்த சென்னை.. இயற்கையின் ருத்ரதாண்டவம் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-12-15 02:43 GMT

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் பாய்ந்தோடுகிறது. இதனால், கருங்குளம் ராமானுஜம்புதூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக ராமானுஜம்புதூர், சேரகுளம், முனைஞ்சிபட்டி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரியவர்களும், சைக்கிளில் சிறுவர்களும் வெள்ள நீரில் சென்று வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நேற்று மாலை முதல் ஏரல் தரைமட்ட பாலத்தின் மேல் தண்ணீர் சென்றதால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளாக தரைமட்ட பாலத்திற்கு மேல் தண்ணீர் சென்றதால், சனிக்கிழமையன்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், உயர்மட்ட பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடத்தின் வழியாக ஊருக்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் செல்லாமல் தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தொடர் மழையால், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரே நாளில் 120 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், கூலக்கடை, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கியது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறிய பொதுமக்கள், உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்