திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறைபனி காலம் தொடங்கியது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், இரவில் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி, மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவியது. இன்று அதிகாலை 10 டிகிரி செல்சியஸ்-க்கும் குறைவாக வெப்ப நிலை காணப்பட்டது. இதனால் பசுமைப் புற்களின் மேல் விழுந்த நீர்ப்பனித் துளிகள் உறைபனியாக மாறின. நீர்பிடிப்புப் பகுதியான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா, ஜிம் கானா புல்வெளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உறைபனி காணப்பட்டது. இந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.