சென்னை ஹார்பரை நடுங்கவிட்ட இரவு.. கடலுக்குள் பாய்ந்த கார்...உள்ளே கேட்ட அலறல் - யார்? எங்கே? மாயம்
இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் சென்னை துறைமுகமும் ஒன்று. ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி சரக்குகள் கையாளப்படுவதால் மிகுந்த பாதுகாப்புடன் இயங்கி வருகிறது.
மத்திய தொழிற்படை, சுங்கத்துறை, கடலோர காவல் படையினர் உள்ளிட்ட ஏராளமான துறைகள் துறைமுகத்தைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துறை முகத்தில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான யார்டு இருப்பதால் ரோந்து பணியில் ஈடுபடும் கப்பல்கள் அங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் கடலோர காவல் படையின் அதிகாரிகள் துறைமுகத்திற்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடலோர காவல் படையில் பணி புரியும் ஜொகேந்திர காண்டா என்பவர் இரவு பணியிலிருந்து இருக்கிறார். அப்போது தனது காரில் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்படும் இடத்திற்குச் சென்று இருக்கிறார். காரை அவரது தற்காலிக ஓட்டுநரான முகம்மது ஷாகி ஒட்டி இருக்கிறார்.
அப்போது திடீரென கார் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து மூழ்கி இருக்கிறது. காரில் இருந்த இருவரும் கடலில் மூழ்கிய நிலையில் கார் கண்ணாடியைப் பலமாக எட்டி உதைத்து காரிலிருந்து தப்பித்த ஜொகேந்திர காண்டா நீந்தி மேல வந்து உயிர் தப்பி இருக்கிறார். ஆனால் கார் ஓட்டுநர் காருடன் மூழ்கி இருக்கிறார்.
உயிர் தப்பிய ஜொகேந்திர காண்டா மயக்கம் அடைந்ததால் அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து துறைமுகத்தில் உள்ள தீயணைப்புத்துறையினருக்கும் மற்றும் கடலோர காவல் படையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையின் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னர் 85 அடி ஆழத்தில் கிடந்த காரை மீட்புக் குழுவினர் கிரேன் மூலம் மீட்டனர். காரை கரைக்குக் கொண்டு வந்து சோதித்த போது அதில் கார் ஓட்டுநர் முகம்மது ஷாகி இல்லாததால் கடல் தண்ணீரில் மூழ்கி இருக்கலாமா என்ற கோணத்தில் மீட்புப் படையினர் மீண்டும் தேடும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன முகம்மது ஷாகி கொடுங்கையூரைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த வருடம் திருமணமான அவருக்கு ஆறு மாத குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்த அவரது தாய் செரினா துறைமுகத்தில் கண்ணீருடன் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. தன்னை துறைமுகத்தினுள் அனுமதித்தால் தானே சென்று தேடிக் கொள்வதாகக் கண்ணீர் பொங்கத் தெரிவித்தார்