திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் தடம் எண் S9A நகர பேருந்தை புதன்கிழமை இரவு நிறுத்தி விட்டு, ஓட்டுநரும் நடத்துனரும் சென்றுள்ளனர். அப்போது மது போதையில் வந்த இளைஞர் ஒருவர், அந்த பேருந்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அரை மணி நேரம் கழித்து வந்த ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்து மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்து, போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தீரன் சின்னமலை நினைவிடம் அருகில் அந்த பேருந்து நிற்பதாக ஓட்டுநருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாருடன் ஓட்டுநர் அங்கு சென்று, தீரன் சின்னமலை நினைவு நினைவிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கைப்பற்றி, அதில் போதையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதை தெளிந்த பிறகு அந்த இளைஞரை போலீசார் விசாரித்தபோது, அவர் ஊத்தங்கரையில் உள்ள வெள்ளைகுட்டை நாயக்கனூரைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.