சென்னை கொளத்தூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர்தான் இந்த பவித்ரன்..
முகவரி மாற்றிக் கொடுத்து ஆர்டர் செய்த பெண்ணுடன் தகராறு
பகுதி நேரமாக ஆன்லைன் டெலிவரி ஆப்பில் பணிபுரிந்து வந்த இவர் , கடந்த 11 ஆம் தேதி கொரட்டூர் என்.எஸ்.சி.போஸ் தெருவை சேர்ந்த நிஷா என்பவரது வீட்டிற்கு, அவர் ஆர்டர் செய்த மளிகை பொருள்களை கொடுக்க சென்றிருக்கிறார்...
அப்போது, செயலியில் நிஷா குறிப்பிட்டிருந்த முகவரியும், அவரது வீட்டு முகவரியும் வெவ்வேறாக இருந்ததால், தான் அலைக்கழிக்கப்பட்ட விரக்தியில் நிஷாவிடம் பவித்ரன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது..
செயலியில் பெண் புகாரளித்ததால் இளைஞர் பணி நீக்கம்
இதனால், ஆத்திரத்தில் இருந்த நிஷா.. தான் ஆர்டர் செய்த செயலியிலே, இளைஞர் குறித்து புகாரளித்த நிலையில், பவித்ரன் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்..
கோபம் கொண்ட பவித்ரன், நிஷாவின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு கண்ணாடியை உடைத்து தகராறு செய்ய, இதையறிந்து துபாயில் பணிபுரிந்து வந்த நிஷாவின் கணவர் போலீசில் புகாரளிக்க... விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது...
ஆத்திரத்தில் பெண் வீட்டின் மீது இளைஞர் தாக்குதல்
இதில் இரு நாள்களுக்கு முன், பவித்ரனை அழைத்து விசாரணை நடத்திய கொரட்டூர் போலீசார், கல்லூரி மாணவர் என்பதால் எதிர்கால நலன் கருதி நடவடிக்கை ஏதும் எடுக்காமல், நீதிமன்றத்தில் அபராதம் மட்டும் கட்டுமாறு சொல்லி அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கின்றனர்..
இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரன், தற்போது தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்..
சாதாரணமாக தொடங்கிய வாய்த்தகராறு பூதாகரமாகி ஒரு உயிரே பறிபோகும் அளவிற்கு வந்து நிற்கும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது...