தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இதுவரையில் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதோடு, வாடகைக்கு விடப்படாமலும் இருப்பதாக குற்றம்சாட்டினார். 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தும்போது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும், மாநில அரசே அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மாசடைந்து இருப்பதால், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மதுரை மாநகராட்சிக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, செயல்படாமல் இருக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதிமுகவை பொருத்தவரை இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், மும்மொழி கொள்கையில் உடன்பாடு இல்லை என்றும் உறுதிபட தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நதிகளை ஒருங்கிணைக்கும் திட்டங்களுக்கு, திமுக அரசு கொண்டு வந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாகவும் ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.