பிரமாண்டம் வேண்டாம் சிறு துரும்பு போதும்... உலகை திரும்ப வைத்த இஸ்ரோ - மார்க்கெட் லெவலை புரட்டி போடும் SSLV

Update: 2024-08-17 10:49 GMT

சிறிய வகை செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ வடிவமைத்திருக்கும் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்... இந்திய விண்வெளி பொருளாதாரத்தின் எதிர்காலமாக பார்க்கப்படுவது ஏன்...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் சர்வதேச நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இஸ்ரோ.... உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்கள் மட்டுமின்றி வெளிநாட்டு செயற்கைகோள்களையும் வர்த்தக ரீதியில் செலுத்தி மிகப்பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 104 நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி அசர வைத்தது. அப்போது பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. எடை குறைந்த செயற்கைகோள்களை ஏவுவதற்கும் இதனை பயன்படுத்துவதால் அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் நானோ செயற்கைக்கோள்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவைகளை விண்ணுக்கு செலுத்தும் வகையில் வந்துள்ளது இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்....

அந்த ரக ராக்கெட்டில்தான்... இ.ஓ.எஸ்-08 உட்பட 3 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு வெற்றிகரமாக ஏவியிருக்கிறது இஸ்ரோ...

எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தில் 2022 ஆகஸ்ட்டில் அனுப்பப்பட்ட SSLV-D1 தோல்வியில் முடிந்தது. ஆனால் 2023 பிப்ரவரியில் SSLV-D2 வெற்றியை வசமாக்கியது. அந்த வரிசையில் 3வது மற்றும் கடைசி சோதனையாக பார்க்கப்பட்ட SSLV-D3 ராக்கெட் மாபெறும் வெற்றிபெற்றுள்ளது.

இந்த ராக்கெட் இனி கமர்சியலாக மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் இஸ்ரோ இயக்குநர் நாராயணன்

இஸ்ரோ விண்ணில் ஏவும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆயிரத்து 860 கிலோ எடையை எடுத்துச் செல்லும் வல்லமை கொண்டது. ஒருமுறை இந்த ராக்கெட்டை தயாரிக்க 130 கோடி ரூபாய் வரையில் செலவாகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் 4 ஆயிரம் கிலோ எடையையும் தூக்கிச் செல்ல வல்லது. இந்த ராக்கெட்டிற்கு 400 கோடி ரூபாய் வரையில் செலவு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது

ஆனால் எடைகுறைந்த புதிய ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. 500 கிலோ எடையை தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.வி மிகச்சிறிய ராக்கெட் என்பதால் 72 மணி நேரத்தில் ஒருங்கிணைக்க முடியும். பெரிய வகை ராக்கெட்டுகள் 70 நாட்களில் சுமார் 60 பேர் இணைந்து ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை வடிவமைக்க வெறும் 6 பேர் மட்டுமே போதும். மிகக்குறுகிய காலத்தில் முழுப்பணியும் முடிந்து விண்ணுக்கு செலுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் மட்டுமே என 2019-ல் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்....

ஒரே நேரத்தில் பல மைக்ரோ வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவது மற்றும் வடிவமைப்பு செலவுகள் குறைவாகும். உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் தொழில்துறை வரும் 2030 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடிக்கும் அதிகமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்போது எஸ்.எஸ்.எல்.வி. வணிகமயமாக்கல்... இஸ்ரோவுக்கு பெரும் வரபிரசாதமாக பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்