புஷ்பா - 2 படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி

Update: 2024-12-06 07:13 GMT

புஷ்பா - 2 படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மாநகரில் உள்ள ஒரு தியேட்டரில் தான், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டிசம்பர் 5ஆம் தேதி 'புஷ்பா 2 - தி ரூல்' திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நடந்தது. இதற்காக, படத்தின் ஹீரோ நடிகர் அல்லு அர்ஜூன் வருகை தந்திருந்தார்.


புஷ்பா 2 படத்துடன், அதில் நடித்த அல்லு அர்ஜூனையும் பார்க்கும் ஆர்வத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த தியேட்டரில் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர்.

நேரம் ஆக.. ஆக.. கட்டுக்கடங்காத கூட்டம் குவியவே, போலீசார் திணற ஆரம்பித்தனர். அப்போது, வேறு வழியில்லாமல், போலீசார், கூட்டத்தைக் கட்டுபடுத்த லேசான தடியடி நடத்தினர். இதனால், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடிக்கவே, கூட்டநெரிசலில் சிக்கி பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, தில்சுக் நகரைச் சேர்ந்த முப்பது ஒன்பது வயதான ரேவதி என்பவர் தனது கணவர் பாஸ்கர் உள்பட 9 வயதான ஸ்ரீ தேஜ், 7 வயதான சன்விகா ஆகிய 2 குழந்தைகளுடன் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பின்னர், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகளின் தாய் ரேவதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால், அவரது கணவர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்ட சம்பவம் மனதை ரணமாக்கியது..

தொடர்ந்து, ரேவதியின் கணவரும், அவரது குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்திருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்