அடிமடியிலே கை வைத்த ரயில்வே துறை.. ஏழைகள் போக முடியாத நிலை உருவாகும்? - மிடில் கிளாஸுக்கும் ஆப்பு வைத்த அறிவிப்பு

Update: 2023-06-28 07:42 GMT

முக்கிய ரயில்களில், ஸ்லீப்பர் கோச்களை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது...இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

குடும்பத்தோடு தொலை தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பும் ஏழை எளிய மக்களின் முதல் சாய்ஸ் ரயில் களாகத்தான் இருக்கும்.

குழந்தைகள், முதியவர்கள், உடல் நலம் குன்றியோர் என அனைத்து தரப்பினருக்குமான செள்கரியங்கள் அங்கே கிடைப்பதுதான் காரணம் .

முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயிலில் பயணச்சீட்டு முன் பதிவு செய்வது, பெரிய நட்சத்திரங்கள் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ படத்திற்கு டிக்கெட் எடுப்பதற்கு சமம்.

அந்த அளவுக்கு தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் முன்பதிவு இருக்கைகளை பெறுவதில் கிராக்கி இருந்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் ஸ்லீப்பர் கோச்களை குறைத்து, கூடுதல் ஏசி பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய LHB பெட்டிகளைக் கொண்ட ரயில்களில், காற்று மற்றும் வானிலை காரணிகளுக்கு இடையே தொடர்ந்து ரயிலை சீராக இயக்க ஏசி பெட்டிகளின் தேவை அதிகரித்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதிலாக குறைந்த கட்டணத்திலான ஏசி ஸ்லீப்பர் பெட்டி அதாவது 3AC பெட்டிகள் மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பயணிகள் மற்றும் சாதாரண ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றியதோடு, மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகைகள் உள்பட பல்வேறு சலுகைகளை யும் ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துவிட்ட நிலையில் தற்போது ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து வருவது பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

உதாரணமாக திருச்சியில் இருந்து சென்னை வர ஸ்லீப்பர் பெட்டிகளில் 225 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 3AC பெட்டிகளில் 600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது , அதாவது மூன்று மடங்கு வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

இதனிடையே மங்களூரு விரைவு ரயில் உட்பட தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் 8 ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து 3AC பெட்டிகளை அதிகப்படுத்த தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் மங்களூரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில், மங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்,சென்னை சென்ட்ரலிலிருந்து மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் செல்லும் ரயில், மலபார் எக்ஸ்பிரஸ் உட்பட 8 ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் அகற்றப்பட்டு ஏசி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

முன்பு S1 முதல் S15 வரை இருந்த ஸ்லீப்பர் கோச்கள் தற்போது S7 வரை குறைந்து விட்டதாக வருத்தம் தெரிவிக்கும் ரயில் பயணிகள், வருவாய் அதிகரிப்பதற்காக ரயில்வே நிர்வாகம், பயணிகளை ஏசி பெட்டிகளை தேர்வு செய்ய நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்