"சாலையை ஆக்கிரமித்து வீடு".. ஜேசிபியுடன் வந்த கோர்ட் ஆர்டர்- அலேக்காக வீட்டை நகர்த்தி கொண்ட ஓனர்
விருதுநகர் மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி பஞ்சவர்ணம் 2001 முதல் 2006 வரை பிள்ளையார் நத்தம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்.
அப்போது ஏற்பட்ட தேர்தல் பகைதான் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக லட்சுமணன் தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஒரு தனி நபரிடம் இருந்து வீட்டு மனையை வாங்கி அதில் 2 கடைகள் மற்றும் 1 வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீடு சாலைக்குரிய இடம் என்றும், சாலை தனியாருக்குரிய இடம் என்றும் குற்றம் சாட்டி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திருச்சுழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்ததால் வழக்கில் லட்சுமணன் தரப்பு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அவரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமலேயே மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் ஜேசிபியுடன் வீட்டை இடிக்க வந்துள்ளனர். ஆனால், வீட்டை இடிக்க வேண்டாம் என்றும் தான் வீட்டை நகர்த்திக் கொள்வதாகவும் கால அவகாசம் கேட்ட லட்சுமணன், ராஜஸ்தான் மாநில தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு தற்போது 14 அடி வரை வீட்டை ஜாக்கிகள் உதவியுடன் நகர்த்தியுள்ளார். அத்துடன் வீடும் 3 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.