'துணிவு' ஸ்டைலில் ஒரு துணிகர கொள்ளை... ஹீரோவாக நினைத்து ஜோக்கரான திருடன் - சிக்கியது எப்படி..?

Update: 2023-01-25 02:23 GMT

இந்த காட்சி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும்...

இதுபோன்று, பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சி, சினிமாவிற்கு வேண்டுமானால் ஒத்துவரலாமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமா? என்று பார்த்தால், இறுதியில் விபரீதத்தில்தான் முடியும்... அதற்கு, சமீபத்தில் நடந்த சில வங்கிக் கொள்ளை சம்பவங்கள் உதாரணம்...

'ஆனால், இதே பாணியில், வங்கியில் கொள்ளையடிப்பதற்காகவே, சமீபத்தில் வெளியான துணிவு உள்ளிட்ட வங்கிக் கொள்ளை திரைப்படங்களை பார்த்து மூளையை தீட்டியுள்ளார் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்...

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது.

அந்த வங்கியில், மிளகாய் பொடி, பெப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவர் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளார்.

அப்போது வங்கியில் 3 ஊழியர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

சுதாரித்துக் கொண்ட இளைஞர், கத்தி முனையில் 3 பேரையும், பிளாஸ்டிக் டேப்பால் கட்டிப்போட முயற்சித்துள்ளார்.

2 பேரை கட்டிப்போட்ட நிலையில், 3வது ஊழியர் அங்கிருந்து தப்பித்து, வங்கிக்கு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு, வெளியில் நின்றிருந்த பொதுமக்கள், வங்கிக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை, வங்கி காவலாளி உதவியுடன் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் என தெரியவந்தது.

சினிமாவை பார்த்து கொள்ளையடிக்க நினைத்ததாகவும், அதற்காக, வங்கிக் கொள்ளை படங்களான துணிவு, நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களை பார்த்து, கொள்ளையடிப்பதற்கான உத்தியை தெரிந்து கொண்டதாகவும் கூறியது, போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.

சினிமா ஹீரோ போல் வங்கியில் கொள்ளையடிக்கச் சென்று, ஜோக்கராக சிக்கிய இளைஞரின் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்