இலவச மின்சார சலுகையை இழந்த பெண்.. அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்

Update: 2023-06-23 05:51 GMT

கர்நாடகாவில், 2 மின் விளக்குகளும், ஒரு மின் விசிறியும் உள்ள வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பள் மாவட்டம், பாக்யா நகர் பகுதியைச் சேர்ந்த கிரிஜாம்மா என்பவர் வீட்டில், இரண்டு மின் விளக்குகளும், ஒரு மின் விசிறி மட்டுமே உள்ளது. வழக்கமாக அவருக்கு அதிகப்பட்சமாக 200 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கிரிஜாம்மாவின் வீட்டில், பழைய மின் மீட்டர் மாற்றப்பட்டு, புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, அவருக்கு அந்த மாதத்தில், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 96 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த கிரிஜாம்மா, மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தார். புதிய டிஜிட்டல் மீட்டரில் கோளாறு இருக்கலாம் என கருதி, மீண்டும் புதிய மீட்டர் மாற்றப்பட்டது. ஆனாலும், ஜூன் மாத மின் கட்டணமாக, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 315 ரூபாய் வந்துள்ளது. மின் கட்டணம் அதிகமாக வருவதால், மின் இணைப்பை துண்டிக்கப்போவதாக மின்வாரிய ஊழியர்கள் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். சித்தராமையா அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சார சலுகையை பெறும் தகுதியையும் கிரிஜாம்மா இழந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்