இன்டிகேட்டர் போட சொன்னவர் கார் ஏற்றி கொலை...நெஞ்சை பதற வைக்கும் பகீர் சிசிடிவி காட்சிகள்...
இந்த ஒற்றை பெண்மணியின் கதறலில் அன்று சுங்குவார்சத்திரம் காவல் நிலையமே கட்டுண்டு கிடந்தது. இப்படி ஒட்டுமொத்த காக்கி சட்டைகளும் கதிகலங்க நிற்க காரணம் சாலையில் நடந்த ஒரு பகீர் கொலை. இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்களின் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் மோதிவிட்டு செல்வது போல் இருக்கும் இந்த காட்சிகள் தற்செயலாக நடந்த விபத்து அல்ல.... திட்டமிட்டு நடந்த கொலை காட்சி.அந்த பயங்கரத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட மற்றொருவர், படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என்ன நடந்தது...? நடுரோட்டில் இப்படி கார் ஏற்றி கொலை வெறி தாக்குதல் நடத்த என்ன காரணம்...? கொல்லப்பட்டவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு. 24 வயதாகும் இவர் அதே பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு பெங்களூருவை சேர்ந்த பிரேமா என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஞாயிறு அன்று இறைச்சி வாங்குவதற்காக சுங்குவார்சத்திரம் பகுதிக்கு நண்பர் ஏழுமலை என்பவருடன் பைக்கில் சென்றிருக்கிறார் விஷ்ணு. அப்போது விஷ்ணுவுக்கு முன் சென்ற ஒரு சிவப்பு நிற கார் இன்டிகேட்டர் போடாமல் திடீரென திரும்பி இருக்கிறது. இதனால் குழம்பிய விஷ்ணு, கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது பைக்கை மோதி இருக்கிறார்.
தற்செயலாக நடந்த இந்த விபத்தினால் விஷ்ணுவுக்கும் காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் பண்ணூரை சேர்த்த பாங்கிராஸ் என்பவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. "இன்டிகேட்டர் போடாம திரும்புனது உன்னோட தப்பு" என பாங்கிராஸுடன் விஷ்ணு மல்லு கட்டி இருக்கிறார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாகிய தருணத்தில், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதனம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் "தனக்கே ரூல்ஸ் சொல்லி தறியா" என கடுப்பான பாங்கிராஸ் அந்த கொடூரத்தை செய்ய துணிந்திருக்கிறார். சண்டை நடந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விஷ்ணுவின் பைக்கை பின் தொடர்ந்து சென்ற பாங்கிராஸ், கார் ஏற்றி கொலை செய்திருக்கிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, இந்த கொடூரத்தை அப்படியே மூடி மறைக்க நினைத்த பாங்கிராஸ், வழக்கறிஞருடன் இறந்தவரின் குடும்பத்திடம் பஞ்சாயத்து பேசி இருக்கிறார்.
இறந்த விஷ்ணுவின் குடும்பத்திற்கு 25 லட்சமும், அடிபட்ட ஏழுமலையின் குடும்பத்திற்கு 10 லட்சமும் கொடுத்து நடந்ததை விபத்தாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த பேச்சு வார்த்தைக்கு விஷ்ணுவின் மனைவி சம்மதிக்காமல் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆதாரங்களின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், பாங்கிராஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சாலை விதியை பின்பற்ற சொன்ன ஒரே காரணத்தினால், இங்கே அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டு ஒரு குடும்பமே நிர்கதியாய் நிற்கிறது