நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை, இரையுமன்துறை மீனவ கிராமங்களுக்கிடையே, எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அந்த பகுதியில் எல்லை கல் போட்டு, இரு ஊர்களையும் பிரித்து நிர்ணயம் செய்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அந்த எல்லை கல்லை மர்ம நபர்கள் யாரோ பிடுங்கி எடுத்து எறிந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூத்துறை மீனவ கிராம மக்கள், மீண்டும் அதே பகுதியில் எல்லை கல்லை போட சென்றுள்ளனர். இதையறிந்த இரையுமன்துறை ஊர்மக்கள் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எல்லை கல்லை போட விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இரண்டு ஊரை சேர்ந்தவர்களும் மோதிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டதை அறிந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இரண்டு ஊர் பங்கு தந்தையர்கள் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு கிராம மக்களும் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.