மகளை திருமணம் செய்து தராததால் தந்தையை துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே, பெண் தரமறுத்த பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் வளர்ப்பு மகன் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் - கலையம்மாள் தம்பதிக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ள நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவரையும் சிறுவயதில் இருந்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கோவிந்தனின் மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து கைக்குமாறு, பாரதி கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பாரதி, நாட்டு துப்பாக்கியால் கோவிந்தனின் தலையில் சுட்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி கலையம்மாளையும், நாட்டு துப்பாக்கியால் காலில் சுட்டதாக தெரிகிறது. உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த விழுப்புரம் டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்டாச்சிபுரம் போலீசார், விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தப்பிச் சென்ற வளர்ப்பு மகன் பாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.