ராணி பத்மாவதி குறித்த பேச்சால் கொந்தளித்த திமுக எம்.பி.க்கள் பாஜக எம்.பி.யால் அவையில் பரபரப்பு
மக்களவையில் ராணி பத்மாவதி குறித்து பாஜக எம்.பி. சி.பி. ஜோஷி பேசிய பேச்சுக்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்பி சி.பி. ஜோஷி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அலாவுதின் கில்ஜிக்கு மண்டியிட மறுத்து ராணி பத்மாவதி மற்றும் அவரது தோழிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களை தீக்கு இறையாக்கிய வீரமான மண்ணில் இருந்து தான் வந்திருப்பதாக குறிப்பிட்டார்.
அவரது பேச்சு சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மெச்சுவது போல் உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
குறிப்பாக திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த விவகாரம் அவையில் சலசலப்பை ஏற்படுத்தியதால், அவையை சபாநாயகர் ஓம்பிர்லா 15 நிமிடங்கள் ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை கூடிய போது பேசிய பாஜக எம்.பி. சி.பி. ஜோஷி சதியை தான் ஆதரிக்கவில்லை எனவும் கற்பை காப்பாற்ற தனது வாழ்க்கையை தியாகம் செய்த பத்மாவதியை பற்றியே பேசியதாகவும் குறிப்பிட்டார்.