தி கோட் திரைப்படத்திற்கு சிக்கலா ? - பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன ?

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படங்களை முன் அனுமதியில்லாமல் வெளியிடக்கூடாது என திரைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-07-05 23:41 GMT

கடந்த டிசம்பர் மாதம், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்த சம்பவம், தமிழக மக்களை மட்டுமல்ல திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது...


அவரின் மறைவால் ஒரு சகாப்தமே முடிவுக்கு வந்து விட்டதாக பலரும் பேச, ஏஐ மூலம் அவரை திரையில் மீட்டெடுக்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்தது...

அதில் முந்திக்கொண்டது நடிகர் விஜய் நடிக்கும் தி க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம்..

தி கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் காண்பிக்க பல கட்ட முயற்சிகளை இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்து வந்ததாக தகவல் வெளியானது..

அதனை மறைந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் உறுதி செய்திருந்தார். ஏஐ மூலம் படத்தில் விஜயகாந்தை காண்பிக்க அனுமதி கேட்டு வெங்கட்பிரபு பலமுறை வந்ததாகவும், விஜயகாந்த் இருந்திருந்தால் மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார் என சுட்டிக்காட்டி அனுமதி வழங்கியதாக தெரிவித்திருந்தார்.

அதே போல், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்திலும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த போவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிக தலைமையிடம் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை திரைத்துறையில் கவனம் பெற்றுள்ளது.

அதில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை திரைப்படங்களில் காண்பிக்க உள்ளதாக, தொடர்ந்து செய்திகள் வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்புகள் இசை வெளியீட்டு விழா மேடைகளில் வெளி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள்து.

மேலும் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்துடன் பயன்படுத்த முறையாக அனுமதி பெற்ற பின்னரே அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் விஜய்யின் தி கோட் திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றே கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது..

வரவேற்பை பெறாத படங்களுக்கு ப்ரமோஷனாக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை பயன்படுத்துவதை தடுக்கவே இது போன்ற அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்