உயிரை பறித்து சென்ற 'தலைவர்' கார்...2 கிமீ துரத்தி அடித்து நொறுக்கிய மக்கள் - நாகையில் பரபரப்பு
நாகையில் அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சாலையில் தாறுமாறாக சென்ற விவசாய சங்க தலைவரின் காரை ஆத்திரத்தில் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். கீழ்வேளூரைச் சேர்ந்த காவிரி தனபாலன் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொது செயலாளராக இருந்து வருகிறார். தனபாலனுக்கு சொந்தமான கார் கீழ்வேளூரில் இருந்து நாகை நோக்கி அதிவேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டிய நபர்கள் மஞ்சக்கொல்லை அருகே அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றுள்ளனர். இவ்விபத்தில் சைக்கிளில் வந்த மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தனபாலனின் காரை பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர். அப்போது வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டுநர் உள்ளிட்டோர் தப்பியோடிய நிலையில், ஆத்திரத்தில் காரை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.