செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு ஊராட்சியின் தலைவராக பழங்குடியின இருளர் இனத்தை சேர்ந்த சாந்தி செல்வம் பணியாற்றுகிறார். இந்தநிலையில் தனக்கு படிப்பறிவு இல்லாததை பயன்படுத்தி, போலி கையெழுத்து போட்டு முறைகேடு நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை சாந்தி முன்வைத்துள்ளார். இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சாந்தி அளித்த புகார் மனுவில் ,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஒரு சில வார்டு உறுப்பினர்கள் இணைந்து போலி பில்களை உருவாக்கி, தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்துவதாகவும், தனது குடும்பத்தை மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.செலவுக்கான பில்களை குறைவாக தன்னிடம் கூறிவிட்டு, அதில் கையெழுத்து பெற்று விடுவதாகவும், அவ்வப்போது ஏரி வேலைக்கு எனக் கூறி கையெழுத்து பெறுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். தெரு மின் விளக்குகளை அமைப்பதில் கையாடல், இருளர் மக்களுக்கு தன்னார்வலர்கள் கொடுத்த பொருட்களுக்கு போலி பில் கொடுத்து பெற்றது, ப்ளீச்சிங் பவுடர் வாங்காமல் பில் போடுவது என பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.