மல்டிபிள் மைலோமா வந்தால் மரணம் தானா..? யாரை தாக்கும் இந்த நோய் ..?சரத்பாபு மரணமும்... கிளம்பியுள்ள பயமும்...

Update: 2023-05-23 23:16 GMT

மல்டிபிள் மைலோமா ரத்தத்தில் பிளாஸ்மா செல்களை தாக்கும் ஒருவகை ரத்தப்புற்று நோய்... உடலில் எலும்பு மஜ்ஜை ரத்தத்தை உற்பத்தி செய்யும் திசு... இந்த எலும்பு மஜ்ஜையில் காணப்படும் பிளாஸ்மா உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இன்றியமையாதது. ஆம், மனித உடலுக்குள் வரும் கொரோனா போன்ற வைரஸ்களை அடையாளம் கண்டு அதனை அழிக்க ஆன்டிபாடிகளை உருவாக்கும். இப்படி உடலை பாதுகாக்கும் பிளாஸ்மா செல்களே கட்டுப்பாட்டை இழந்து புற்றுநோயாக மாறுவது மல்டிபிள் மைலோமா புற்றுநோய். மல்டிபிள் மைலோமா பாதிப்பு கொண்ட பிளாஸ்மாக்கள் உருவாக்கும் புரதங்கள் உடல் உறுப்புகளை பாதிக்கச் செய்கிறது.

அதாவது கால்சியம், அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகங்களுக்கு சேதம் விளைவிக்கிறது, எலும்புகளுக்கு சேதம் விளைவிக்கிறது. எலும்பு முறியும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.மல்டிபிள் மைலோமா புற்று நோய் லட்சத்தில் ஒருவரை தாக்கும் புற்றுநோயாகும்.. பெண்களைவிடவும் ஆண்களையே அதிகமாக பாதிக்கிறது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். 47 வயதுக்கு மேற்பட்டோரை தாக்குவதாகவும் கூறப்படுகிறது.இந்த வகையான புற்றுநோய்க்கு மரபுவழி பாதிப்பு என்ற காரணம் தவிர்த்து கதிர்வீச்சு, பூச்சிக்கொல்லிகள் போன்ற சில சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட புற காரணிகளும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இதுபோக HTLV, HIV வைரஸ்கள் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்

மல்டிபிள் மைலோமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குமட்டல், அதிக தாகம், பசியின்மை, எடை இழப்பு, எலும்பு வலி, குழப்பம், உடற் சோர்வு, அடிக்கடி தொற்று நோய்கள் ஆகியவை அறிகுறியாக இருக்கலாம் எனவும் சொல்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். மல்டிபிள் மைலோமா வழக்கமான இரத்த பரிசோதனைகள் மற்றும் பிற பரிசோதனைகள் வாயிலாக கண்டறியப்படுகிறது. இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை உள்ளதா...? என்றால் ஆரம்பக்கட்டத்தில் நோயை அறிதல் அவசியம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். அதாவது உறுப்பு சேதத்தை தடுக்கும் வகையில் கூடிய விரைவில் சிகிச்சையை தொடங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பொதுவான புற்றுநோய் தாக்கம் கொண்ட செல்களை அழிக்கும் கீமோதெரபி சிகிச்சை, ஸ்டெம் செல், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற நோய் பரவல் சிகிச்சை மருந்துகளை கொண்டு சிகிச்சையளிக்கும் நடைமுறை இப்போது உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்