அடிமையாகி ரூ.70 லட்சம் இழந்த கணவன்.. தேவதையாகி புது மனிதனாக மாற்றிய மனைவி.. 'மயக்கமென்ன' ரியல் லைஃப் யாமினி கதை

Update: 2023-07-05 06:21 GMT

பெங்களூருவில், ஆன்லைன் ரம்மியில் அடிமையாகி 70 லட்சம் ரூபாய் இழந்த கணவரை, சூதாட்டத்தில் இருந்து மீட்டு, புதுவித மனிதனாக மாற்றிய மனைவியின் போராட்டத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...


மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியா? என எண்ண வேண்டாம்.... இந்த சம்பவம் நடந்தது பெங்களூருவில்...

பெங்களூருவின் சி.வி. ராமன் நகரில் வசிக்கும் விகாஸ் என்ற பொறியாளருக்கு, திருமணமான நிலையில், 2 குழந்தைகள் உள்ளன.

விகாஸ், நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் இருந்தாலும், குறுகிய காலத்தில் பணம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில். அவரது எண்ணமோ திடீரென ஆன்லைன் ரம்மி பக்கம் திரும்பியுள்ளது. ஆன்லைன் ரம்மியில் படிப்படியாக கவனத்தை செலுத்திய விகாஸ், ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீளமுடியாமல் முழுநேர சூதாட்டக்காரராக மாறியுள்ளார்...

வேலைக்கு செல்லாமலும், குடும்பத்தை கவனிக்காமலும், கணவனின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த மனைவியோ பலமுறை எடுத்துரைத்துள்ளார். ஆனால் அதனை சற்றும்

கண்டுகொள்ளாத விகாஸ், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட, மனைவியோ சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கி இருந்துள்ளார்.

விகாஸின் நடவடிக்கையை கண்காணிக்கத் தொடங்கிய அவரது மனைவிக்கு, அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது ஒரு சம்பவம்...

தனது கணவர் வங்கியில் வைத்திருந்த 70 லட்சம் ரூபாய் பணத்தை, ஆன்லைன் ரம்மியில் இழந்ததை அறிந்த அவர், அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இந்த விவகாரம் குறித்து கணவனிடம் கேட்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஆன்லைன் ரம்மியில் 70 லட்சம் ரூபாய் இழந்து, குடும்பத்தை நிற்கதியாய் விட்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அந்தப் பெண்மணியையும், அவரது கணவனையும் காவல்நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

முதலில் மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார், அவரை தனது கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை சம்மதிக்க மறுத்த மனைவி, போலீசாரிடம் ஒரு வேண்டுகோள் மட்டும் விடுத்தார்.

அதாவது, ஆன்லைன் ரம்மி விளையாட மாட்டேன் என கணவர் கூறினால், அவருடன் வாழத் தயார் என கூறியுள்ளார்.

அப்போதுமனைவியின் பேச்சைக் கேட்டு மனம் இறங்கிய கணவன், இனி ஆன்லைன் ரம்மியே விளையாட மாட்டேன் என்றும், இனி அலுவலகம் சென்று குடும்பத்தை பார்த்துக்கொள்வேன் என்றும் உறுதியுடன் கூறியுள்ளார்.

அதன் பிறகு, மனநல ஆலோசனை வழங்க விகாஸை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் போலீசார். 7 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், ஆன்லைன் ரம்மியால் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அதிலிருந்து விடுபட்டு பூரண குணமடைந்தார்.

கணவனின் மாற்றம் 7 மாத போராட்டத்திற்குப் பின் கிடைத்த வெற்றி என்பதால், மகிழ்ச்சியில் திளைத்துப் போனார் விகாஸின் மனைவி.

குடும்பமே முக்கியம் என கருதிய விகாஸ், தனது வங்கிக் கணக்கை மனைவியின் பெயரில் இணைத்துக் கொண்டார்.

ஆன்லைன் ரம்மி தன்னை புதைகுழியில் தள்ளியதாகவும், தற்போது மறுபிறவி எடுத்து வந்துள்ளதாகவும் விகாஸ் மனம் நெகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்