சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்துள்ளது தர்மமுனீஷ்வரர் கோவில்.
வழக்கமாக பக்தியுடனே கோவிலை பார்த்த சென்ற பாதசாரிகள் அன்று மண் தரையில் வழிந்தோடிய குருதியை பயத்துடன் கடந்து சென்றனர்.
முனீஷ்வரன் கோவில் என்பதால் அங்கே சிதறி ஓடுவது ஆட்டு ரத்தமோ, கோழி ரத்தமோ அல்ல... ஒரு பெண்ணின் ரத்தம்..
கொல்லப்பட்டவர் யார்...? கொலைக்கான காரணம் என்ன...? காலையிலேயே ஏரியாவே கதிகலங்கி நின்றது ஏன்...? என்று அறிந்து கொள்ள விசாரனையை தொடங்கினோம்.
சடலமாக கிடந்தவர் சிங்கம்புணரியை சேர்ந்த சூர்யா. 30 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் என்பவரோடு திருமணமாகி 5 வயதில் ஒரு மகள் உள்ளார். சூர்யா தற்போது தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக இரு சக்கரவாகனத்தில் சென்ற சூர்யாவை எதிரே பைக்கில் வந்த ஒருவர் மோதி தள்ளி இருக்கிறார்.
அந்த மோதலில் தடுமாறி கீழே விழுந்து எழுவதற்குள், அந்த நபர் சூர்யாவை சரமாரியாக வெட்டி சரித்து கொலை செய்திருக்கிறார். சூர்யா துடிதுடித்து இறந்ததை கண்கூடாக பார்த்து உறுதி செய்த பிறகு, வெட்டிய கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் அந்த மர்ம நபர்.
அவர் வேறு யாருமல்ல.....சூர்யாவை தொட்டு தாலிகட்டிய கணவன் பிரபாகரன்...
கணவனே மனைவியை இப்படி துள்ளதுடிக்க வெட்டிக்கொல்ல காரணம் சந்தேகம் என்னும் சாத்தான்.
திருமணமான புதிதில் மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு வெளி நாட்டில் பணி புரிந்திருக்கிறார். உள்ளூரில் மனைவி சூர்யாவும் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கணவன் வெளி நாட்டிலும், மனைவி உள்ளூரிலும் வேலைக்கு சென்று வந்ததால் இருவராலும் இல்லறத்தில் நேரத்தை செலவிட முடியாமல் போயிருக்கிறது.
நேரம் வித்தியாசம் இருப்பதால், சூர்யா விழித்திருக்கும் நேரத்தில் பிரபாகரன் வேலைக்கு செல்வதும், கணவன் விழித்திருக்கும் நேரத்தில் மனைவி வேலைக்கு செல்வதுமாய் மாறி மாறி பொழுதுகள் கழிந்திருக்கிறது.
இந்த வாழ்வியல் எதார்தத்தை புரிந்து கொள்ள முடியாத பிரபாகரன் மனைவிக்கு யாருடனே தகாத உறவு இருப்பதாக சந்தேகித்திருக்கிறார்.
அந்த சந்தேகம் நாளுக்கு நாள் பிரபாகரனின் உறக்கத்தை தொலைக்க, உடனே அடுத்த பிளைட்டிலேயே ஊருக்கு கிளம்பி வந்திருக்கிறார்.
ஊருக்கு வந்த நாள் முதல் மனைவியின் செல்போனுக்கு இரவு பகல் பாராது வந்த அழைப்புகள் எரியும் தீயில் எண்ணைய் ஊற்றியதை போல, பிரபாகரனை மேலும் கொதிப்படைய செய்திருக்கிறது.
மனைவியின் பாவனையில் இருந்த மாற்றமும், தொடர் செல்போன் அழைப்புகளிலும் கடுப்பான பிரபாகரன், வேலையை விட்டுவிடும்படி சூர்யாவை கண்டித்திருக்கிறார்.
ஆனால் அதை சூர்யா கேட்கவில்லை... நான் வேலைக்கு செல்வது தான் எனக்கான அடையாளம் என கூறி வாதம் செய்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கிடையே பெரும் சண்டை வெடித்திருக்கிறது.
நாளை வேலைக்கு செல்லவே கூடாதென கண்டிப்புடன் கூறி விட்டு உறங்க சென்ற பிரபாகரன், மறு நாள் விடிந்ததும் வெளியே சென்றுள்ளார்.
ஆனால் கணவனின் பேச்சை கேட்காமல் சூர்யா, அன்று காலை வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். இரவு அவ்வளவு கண்டித்த பிறகும் மனைவி வேலைக்கு சென்றது, பிரபாகரனை ஆத்திரத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது.
அடுத்த நொடியே சூர்யாவை பின் தொடர்ந்து சென்று சென்ற பிரபாகரன், மனைவியை கொடூரமாக வெட்டி கொன்றது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.