இந்த விளம்பரங்களை தொட்டாலே ஆபத்து - உஷார் மக்களே!

Update: 2023-05-12 11:31 GMT

எண்டர்டெயின்ட்மென்ட், பொழுதுப்போக்கு மற்றும் பல தரப்பட்ட தகவல்களின் தேடலுக்கு நாம் இணையதளத்தை பயன்படுத்தும் போது திடீரென செல்போன் ஸ்கிரீனை மறைத்து தோன்றும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலூட்டும்...அதிலும் சில விளம்பரங்கள் நாம் எதற்காக அந்த இணையதள பக்கத்திற்கு வந்தோம் என்பதையே மறக்கடித்து, தொடர் விளம்பரங்களின் மூலம் நமது கவனத்தை திசை திருப்பி வேறோரு பக்கம் அழைத்து செல்லும்.இதெல்லாம் நம் ஒவ்வொருவருடைய தினசரி வாழ்க்கையிலும் சாதாரணமாக நடக்க கூடிய ஒன்று தானே என்று எளிதாக கடக்க முற்படும் போது தான் அங்கு ஒரு மோசடி கும்பல் ட்விஸ்ட் வைத்திருக்கிறது..

சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் ஒரே விவகாரம் தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் காவல்நிலையத்தில் குவிந்திருக்கிறது... அனைத்தும் இணையதள விளம்பரங்களை க்ளிக் செய்ய கூறியும், யூடியூப் வீடியோக்களை லைக் செய்ய தூண்டியும் தாங்கள் பண மோசடிக்கு ஆளாக்கப்பட்டதாக புகார்கள்... பாதிக்கப்பட்ட அனைவரும், எளிதாக அதிக பணம் சம்பாதிக்க விரும்பும் மிடில் கிளாஸ் மற்றும் இளைஞர்கள் என்பதை அறிந்த சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியதில் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது...

பாதிக்கப்பட்டவர்கள் இணையதள பக்கத்தை பயன்படுத்தும்போது, நீங்கள் இந்த விளம்பரத்தை க்ளிக் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றும், இந்த பக்கத்திற்கு ரேட்டிங் கொடுப்பதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் என்றும் அவர்களின் செல்போன் ஸ்க்ரீனில் விளம்பரம் தோன்றியிருக்கிறது... இதை ஆரம்பத்தில் தவிர்த்த மக்களை, மீனுக்கு இரை வைப்பது போல் வைத்து வலையில் விழவைக்கும் டெக்னிக்கை மோசடி கும்பல் பயன்படுத்தியிருக்கிறது...தொடர் விளம்பரங்கள்... கவர்ச்சிகரமான புகைப்படங்கள் என மக்களை கிளிக் செய்ய வைத்த கும்பல், தொடக்கத்தில் கூறியது போன்றே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரையில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது...

பின்பு அவர்களின் விவரங்களை சேகரித்து டெலிகிராமில் குரூப் ஆரம்பித்த நிலையில், தொடர்ச்சியாக சில இணையதள விளம்பரங்கள், டெலிகிராம் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முதலியவற்றை க்ளிக் செய்யவும், லைக் செய்யவும் தூண்டி வந்துள்ளது... இதில் பணம் வாங்கி பழக்கப்பட்ட கைகள், பின்பு அந்த மோசடி கும்பல் விரித்த வலையில் மெல்ல மெல்ல விழ ஆரம்பித்திருக்கிறார்கள்... முதலீடு செய்தால் இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்னும் ஆசை வலை விரித்ததில், 35 லட்சம் முதல் 1.2 கோடி வரையிலான பணத்தை முதலீடு செய்து தனி நபர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை ஏமாந்து இருக்கிறார்கள்...

அதன்பிறகு என்ன... வந்த வேலை முடிந்தது எனக் கூறி கல்தா கொடுத்துவிட்டு 5 கோடி ரூபாய் வரையிலான பணத்தை வாரி சுருட்டிய அந்த கும்பல் தலைமறைவாகி இருக்கிறது...இதையறிந்து அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் காவல்நிலையத்தை நோக்கி படையெடுத்து புகார் கொடுக்கவே, சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.... கையடக்கத்தில் இருப்பதாலோ என்னவோ, இன்றைய காலக்கட்டத்தில் தப்பி தவறி கூட செல்போனை கீழே வைக்க மறுக்கும் இளைஞர்கள், இந்த மாதிரியான மோசடி கும்பலிடம் இருந்தும், ஆன்லைன் தொடர்பான விவகாரங்களை கவனமுடன் கையாளவும் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்