பிரபல நடிகை மீது பாய்ந்த அவதூறு வழக்கு - 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணன் குறித்து அவதூறு பரப்பியதாக, நடிகை கல்பிகா கணேஷ் மீது தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2, உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன். இவரும், ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை தன்யா பாலகிருஷ்ணாவும் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். வெப் சீரீஸ்களில் நடிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், தங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூடியூபில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் கூறி, பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணன் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு ஜனவரி 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கல்பிகா கணேஷுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.