விஷ சாராய உயிரிழப்புகள்.. "மொத்த வஞ்சத்தை காட்டிய ஆளுநர்" - கடுமையாக விமர்சித்த முரசொலி நாளிதழ்
விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டதை, முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ள திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, விஷச்சாராய உயிரிழப்பில் ஆளுநர் ரவியும் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார் என விமர்சித்துள்ளது. ஆளுநர் அறிக்கை கேட்டது தவறில்லை என குறிப்பிட்டுள்ள முரசொலி நாளிதழ், விளக்கம் கேட்டதை அறிக்கையாக வெளியிட்டது, அவரது நெஞ்சில் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துவதாக கூறியுள்ளது. ஆளுநரின் சில கேள்விகள் அவரது அரசியல் தெளிவற்ற தன்மையின் மொத்த வெளிப்பாடு என சாடியுள்ள முரசொலி, ஆளுநர் எப்போதும் சிறுபிள்ளைத்தனத்தோடு செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளது. ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால், தனது பதவியை துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தில் பாஜக தலைவராகிவிடலாம் எனவும், அதை விடுத்து ஆளுநர் பதவிக்குரிய தகுதியை சீரழிக்கும் வேலையை தொடர்ந்து செய்வதை நிறுத்துவது, நாட்டுக்கு நல்லது எனவும் முரசொலி நாளிதழ் கூறியுள்ளது.