அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை… 6 வருடம் காத்திருந்து பழிதீர்த்த பயங்கரம்..?

Update: 2023-07-18 03:19 GMT

இரண்டு பக்கமும் புதர் மண்டிய அந்த சாலை, திடீரென்று கூடிய மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டது.

சாலையில் கிடந்த கொடூரக் காட்சி வாகனத்தில் சென்றவர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தது…

பெண்கள் கூட்டம் கண்ணீர்மல்க கதறிக் கொண்டிருக்க சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வாகனத்தோடு காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நட்டநடு சாலையில் உடலில் ரத்தகாயங்களுடன் ஒருவர் பைக்குடன் சரிந்துகிடந்துள்ளார்.

இந்த காட்சியை பார்க்கும்போது நடந்திருப்பது சாலை விபத்து என்று எண்ண தோன்றும்… ஆனால், அது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை…

சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட போலீசார், அடுத்தகட்ட விசாரணையில் இறங்கினார்கள்.

கொல்லப்பட்டவர் சந்திரபாண்டியன். 46 வயதாகிறது. திண்டுக்கல் மாவட்டம் மாவூத்து பட்டி ஊராட்சியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த நான்கு முறை நடைப்பெற்ற தேர்தலில் வெற்றியடைந்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சியின் கவுன்சிலராக இருந்துள்ளார்.

தொடர்ந்து நான்கு முறை கவுன்சிலர் பதவியை விட்டுக் கொடுக்காமல் வெற்றிப் பெற்றதால் ஆதரவாளர்களை விட சந்திரபாண்டியனுக்கு ஊருக்குள் எதிரிகள் அதிகமாகியிருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த அன்று திருமணம் செய்து கொடுத்த தன் மகளை பார்ப்பதற்காக லிங்கவாடி பகுதிக்கு பைக்கில் சென்றிருக்கிறார் சந்திரபாண்டியன். அப்போது பாலமேடு பகுதியில் வைத்து சந்திரபாண்டியனை பைக்கில் வந்த ஒரு மர்ம கும்பல் வழிமறித்திருக்கிறது.

கையில் அரிவாளுடன் வந்த அந்த கும்பல் சந்திரபாண்டியனை சாலையிலேயே கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்திருக்கிறது.

நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுச் செய்த போலீசார் கொலைக்கான காரணத்தை கண்டறிய ஊர்காரர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் தான் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் சந்திரபாண்டியன் ஏ 3 அக்கியூஸ்டாக கைதுச் செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சந்திரபாண்டியன் அண்ணன் மகள் மாமியார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதே சமயத்தில் மருமகனுக்கும் வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால் மகள் மரணத்தில் சந்தேகமடைந்த சந்திரபாண்டியன் குடும்பத்தினர் 2017ஆம் ஆண்டு மருமகனை வெட்டிக் கொலைச் செய்திருக்கிறார்கள்.

அந்த வழக்கில் சந்திரபாண்டியன் மூன்றாவது குற்றவாளியாக கைதுச் செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த சூழலில்தான் சந்திரபாண்டியன் கொலைச் செய்யப்பட்டுள்ளது காவல்துறைக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

சந்திரபாண்டியன் கொலை செய்யப்பட்டது பழைய கொலைக்கு பழிக்குபழியா அல்லது அரசியல் காழ்புணர்ச்சியில் கொலை செய்யப்பட்டாரா என்ற உண்மை குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்ட பின்னரே தெரிய வரும்…

Tags:    

மேலும் செய்திகள்