45 நாட்களில் 3வது பாமக நிர்வாகி கொலை...சிக்கிய கொலையாளியின் பகீர் வாக்குமூலம் - அலறும் செங்கல்பட்டு

Update: 2023-07-10 21:45 GMT

செங்கல்பட்டில், முன்விரோதம் காரணமாக, பாமக நகர செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

பழிக்குப்பழியாக நடந்த கொலை... நேரம் வரும் வரை காத்திருந்து நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலை... செங்கல்பட்டு மாவட்டத்தையே அதிர்வுக்குள்ளாக்கி உள்ளது...

செங்கல்பட்டு மணிகூண்டு பகுதியில் பூக்கடை நடத்தி வந்தவர் நாகராஜ். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நகர செயலாளராக பதவி வகித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் அவர்... வீட்டிற்கு கிளம்பிய சில நிமிடங்களில், நாகராஜை நோட்டமிட்ட மர்மநபர்கள், திடீரென அவரை சுற்றி வளைத்தனர்.

தனது உயிருக்கு ஆபத்து நெருங்கியதை உணர்ந்த நாகராஜ், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, மறைத்து வைத்திருந்த கத்தியால், மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மர்மநபர்களின் இந்த கொடூர தாக்குதலைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அலறி துடித்து ஓட்டம் கண்டனர்.

இந்த துணிகர சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, அந்த மர்மகும்பல் அங்கிருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நாகராஜின் உடலைக் காண அவரது உறவினர்களும், பாமக கட்சியினரும் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்பாக திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பானது. அதன் பிறகு போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

பாமக நிர்வாகிகளை மட்டுமே குறிவைத்து கொலைகள் அரங்கேறி வருவதாகவும், கடந்த 45 நாட்களில் மட்டும் பாமகவினர் 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அக்கட்சியின் நிர்வாகி திருக்கச்சூர் ஆறுமுகம் குற்றம்சாட்டியுள்ளார்.

திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில செயலாளர், வன்னியர் சங்கம்

"கடந்த 45 நாட்களில் பாமக நிர்வாகிகள் 3 பேர் கொலை"

"பாமகவினரை மட்டும் குறிவைத்து அரங்கேறும் கொலைகள்"

"உளவுத்துறை, காவல்துறைக்கு தெரியாமல் கொலைகள் நடக்காது"

"காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா?"

இந்த விவகாரத்தில் அதிரடியாக விசாரணை மேற்காண்ட போலீசார், இந்த கொலையில் தொடர்புடைய அஜய் என்கிற சிவப்பிரகாசம், புலிப்பாக்கம் ரயில்வே பாதை அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று போலீசார் கைது செய்ய முற்பட்டபோது, அஜய் போலீசாரையே தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, அஜய்யின் கால் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, காயமடைந்த அஜய்க்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர், கொலை செய்யப்பட்ட நாகராஜனின் 17 வயது மகளை காதலித்து வந்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியும் சூர்யாவும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாகராஜ், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு நாகப்பட்டினத்தில் வைத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 17 வயது சிறுமியையும் மீட்டனர். அப்போது செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சூர்யா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த சூர்யா, தனது நண்பர்களுடன் இணைந்து பழிக்குப்பழியாக இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதாக விசாரணையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், நாகராஜனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மக்கான் சந்து பகுதியில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டுள்ளது

இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான சூர்யா உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், பதற்றத்தைக் குறைக்க ஏராளமான போலீசார் செங்கல்பட்டில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்