எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் ஈரான் தாக்குதல் - இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் குற்றச்சாட்டு
இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்று... பல்வேறு நாடுகளுக்கான கச்சா எண்ணெய் சப்ளைக்கு முக்கிய செக் பாயிண்ட் ஆக விளங்குகிறது ஈரான் - எமிரெட்ஸ் இடையிலான இந்த குறுகிய பாதை... நாளொன்றுக்கு 21 மில்லியன் பேரல் எண்ணெய் அதாவது, 8 ஆயிரத்து 925 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் இப்பாதை, அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலின் முக்கிய பகுதியாகவும் இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு முதல் ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச நாடுகளின் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டும் நிலையில், இதனை ஈரான் மறுத்து வருகிறது. இந்நிலையில் ஓமனின் மாசிரா தீவு அருகே சென்றுக்கொண்டிருந்த மெர்சிர் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய் கப்பல் மீது கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டது.