ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவி : இந்தியாவுக்கு 55 ஆசிய, பசிபிக் நாடுகள் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், இந்தியாவுக்கு ஆசிய - பசிபிக் குழுமத்தை சேர்ந்த 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Update: 2019-06-27 10:00 GMT
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், இந்தியாவுக்கு ஆசிய - பசிபிக் குழுமத்தை சேர்ந்த 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதம் உள்ள 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. இந்த உறுப்பினர் நியமனம், பிராந்திய அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்க - ஆசிய நாடுகளுக்கு 5 உறுப்பினர் பதவிகளும், லத்தீன் - அமெரிக்க - கரீபியன் நாடுகளுக்கு 2 உறுப்பினர் பதவிகளும் வழங்கப்படுகின்றன. இதேபோல் மேற்கு ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கு 2 உறுப்பினர் பதவிகளும்,  கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு உறுப்பினர் பதவியும் வழங்கப்படுகிறது. இவை 2 ஆண்டுகளுக்கான பதவி. ஒவ்வொரு ஆண்டும், 5 தற்காலிக உறுப்பினர் நாடுகள், ஐ.நா. பொதுச்சபையால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், 2021, 2022ம் ஆண்டுகளுக்கான தற்காலிக உறுப்பினர் பதவிக்கு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில், இந்தியா போட்டியிடுகிறது. இதற்கு ஐ.நா.வின் ஆசிய - பசிபிக் குழுமத்தை சேர்ந்த மொத்தம் 55 நாடுகளும் இந்தியாவுக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தகவலை தமது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதின், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த, 55 நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்