நடு இரவில் பொழியும் கல் மழை...ஊருக்குள் புகுந்த குட்டிச்சாத்தான்?! அரண்டு கோயிலுக்கு ஓடி வந்த மக்கள் நடுங்க விடும் திக் திக் உண்மை தமிழகத்தில் ஓர் மர்ம கிராமம்

Update: 2024-07-08 04:43 GMT

இரவு நேரங்களில் வீட்டின் கூரைகள் மீது பொழியும் கல் மழையால் ஒரு கிராமமே அச்சத்தில் உறைந்துள்ளது... நிச்சயம் இது குட்டிச்சாத்தான் வேலை தான் என அப்பகுதி மக்கள் உறுதியாக நம்புகின்றனர்...எங்கே இந்த விநோத சம்பவம்?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

முண்டாசுப்பட்டி படம் பார்த்திருப்போம்... ஒவ்வொரு வீட்டு கதவிலும் "திரும்பிப் போ" என்று எழுதி வைத்திருப்பார்கள்... இரவு வரும் ரத்தக்காட்டேரிகள் அதைப் படித்து விட்டு அப்படியே போய் விடும் என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கை...

ஆனால் உண்மையிலேயே இங்கு இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் குட்டிச் சாத்தான்கள் வீடுகளின் மேல் கல்லெறிந்து விளையாடுவதாக நம்புகின்றனர் இந்த கிராம மக்கள்...

திருப்பூர் மாவட்டம்...ஒட்டப்பாளையம் காலனி...இது தான் அந்த மர்ம கிராமம்...

ஏதோ கோவில் திருவிழா போல...அதனால் விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது என யாரும் தவறாக நினைக்க வேண்டாம்...

குட்டிச் சாத்தான்களுக்கு பயந்து கருப்பராயன் கோவிலில் தஞ்சம் புகுந்த ஒட்டுமொத்த கிராமத்திற்கும் மொத்தமாக தயாராகிக் கொண்டிருக்கிறது உணவு...

கடந்த 10 தினங்களாக இரவு தூக்கத்தைத் தொலைத்து விட்டு அல்லாடுகின்றனர் இப்பகுதி மக்கள்...

இரவு 7 மணிக்குத் துவங்கி நள்ளிரவு 1 மணி வரை கற்கள் அப்படியே மழை போல் பொழிகிறதாம்... திடீர் திடீரென விழும் கற்களால் ஓடுகள் உடைகின்றனவாம்...

குழந்தைகளை வைத்துக் கொண்டு உயிர் பயத்துடன் வாழ்ந்து வரும் கிராம மக்கள் இரவு முழுவதும் விழித்து விட்டு பகலில் வேலைக்குப் போக முடியாமல் தவித்து வருகின்றனர்...

இதனால் இரவு முழுவதும் இளைஞர்கள் சேர்ந்து ஊரைச் சுற்றி ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்... ஆனாலும் கல் தான் சிக்குகிறதே ஒழிய அதை எறிந்த விஷமி சிக்கியபாடில்லை...

இதற்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிலையில், எவ்வளவோ முயன்றும் யார் கல்லெறிந்தது என தெரியாததால் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்குக் குடியேறி விட்டனர்...

ஆனால் ஒன்று தெரியுமா?...இதோ எறியப்பட்ட கற்களை ஆதாரத்திற்காக சேகரித்து வைத்துள்ளனரே...இதில் 99 சதவீத கற்கள் ஆட்கள் மீது விழவில்லை...ஒருவேளை குட்டிச் சாத்தானுக்குக் குறி பார்க்கத் தெரியவில்லையோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது...

சத்தியமாக இது குட்டிச் சாத்தான் வேலை தான் என அடித்துச் சொல்கின்றனர் கிராம மக்கள்... எனினும் ஒரு சிலர் இது நிச்சயம் மர்ம ஆசாமிகள் செய்யும் வேண்டாத வேலை தான் என சந்தேகம் தெரிவித்து காவல்துறைக்குத் தகவல் தரவே தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது...

கல்லெறிவது குட்டிச் சாத்தானா?...அல்லது குட்டிச் சாத்தான் போல் சேட்டை செய்யும் குள்ளநரிகளா?...தீவிர விசாரணை நடத்தி இந்த அமானுஷ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் விருப்பமாக உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்