தேனியை உலுக்கிய நர்ஸ் கூட்டு பலாத்காரத்தில் அதிர்ச்சி திருப்பம்.. சம்பவ நாளுக்கும் கர்ப்பத்திற்கும்.. அறிவியல் டெஸ்ட்டில் அம்பலம்

Update: 2024-07-21 03:13 GMT

தேனியில் தந்தை வாங்கிய கடனுக்காக மகளை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில், உண்மைத் தன்மை இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் தென்கரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தந்தையுடன் சேர்ந்து போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தந்தை வாங்கிய கடனுக்காக தன்னை கடத்திச் சென்று காரில் வைத்து 5 பேர் வன்கொடுமை செய்த‌தாகவும், வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் தனித்தனியாக வீடியோ பதிவுடன் கூடிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சம்பவ நாள் அன்று, குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் செல்போன் வெவ்வேறு பகுதியில் இருந்த‌து தெரிய வந்துள்ளதாக சிடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்த இளம் பெண்ணிற்கு அறிவியல் ரீதியான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கர்ப்பிணியாக இருப்பதற்கும், குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நாளுக்கும் தொடர்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சம்பவ நாளன்று புகார் அளித்த பெண், சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த‌து தெரியவந்துள்ளது. இதன் மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த‌தாக அளித்த புகாரில், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என பெரியகுளம் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் ஜெயராணி, ஆதாரங்களுடன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்