பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வேளையில், திட்டத்திற்கு நிலம் கையக படுத்துவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை நாளிதழில் வெளியிட்டு வருகிறது. ஏகனாபுரம் கிராமத்தில் முதல் கட்டமாக 153 ஏக்கர் நிலங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 234 ஏக்கர் நிலங்களுக்கும் எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிராக ஏகனாபுரம் கிராம மக்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தில் மனுக்களை வழங்கினர். இப்போது மூன்றாவது கட்டமாக ஏகனாபுரம் கிராமத்தில் 58.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் புதிய விமான நிலைய திட்ட நிலமெடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பையும் மீறி அரசு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு கிராம மக்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.