மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக வரப்பெற்ற புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 2 மாதங்களில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வரப்பெற்ற 425 புகார்களில் 90 சதவீத புகார்கள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில், பிரச்சார களம் வன்முறை, இரைச்சல், ஆடம்பரம் ஆகியவை இல்லாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் திருப்தி தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பிரதமர் மோடி மீதும், ராகுல் காந்தி மீது பாஜகவும் அளித்த புகாரில், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் அளித்துள்ள பதில்களை ஆராய்ந்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசியக் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள், அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் சமூகத்தின் நுட்பமான கட்டமைப்பைக் கெடுக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.