சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி கேட்ட வடிவேலு - நீதிமன்றம் போட்ட பரபர உத்தரவு
யூ டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாக, 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தரக்குறைவாக பேசி உள்ளதாகக் கூறி, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பொது மக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,
தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் என்றும் வடிவேலு கோரியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், மனு மீது 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டார். தாம்பரத்தில் பிரச்னைக்குரிய நிலத்தை வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தாக்கல் செய்த வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.