"சிறுவன் உயிரை குடித்த கேன் வாட்டர்" சென்னை வாசிகளை நடுங்கவைத்த சம்பவம்-விசாரணையில் பல அதிர்ச்சிகள்

Update: 2024-06-30 06:10 GMT

"சிறுவன் உயிரை குடித்த கேன் வாட்டர்"

சென்னை வாசிகளை நடுங்கவைத்த சம்பவம்

விசாரணையில் வெளியான பல அதிர்ச்சிகள்

நேரடியாக களத்தில் இறங்கிய அமைச்சர்

சைதாப்பேட்டையில் பீகாரைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், மெட்ரோ குடிநீரில் எவ்வித கலப்படமும் இல்லை என்றும், தனியார் கேன் வாட்டரில் கலப்படம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது...

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால்11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வெளியான செய்தி, ஒட்டுமொத்த சென்னை மக்களையும் திகைக்க செய்தது..

பீகாரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரின் 11 வயது மகன் யுவராஜ் சில நாட்களுக்கு முன்பாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வர... பின்னர் சிறுவனின் உடல்நிலை மெல்ல மெல்ல மோசமாகி வர... கடைசியில் மரணித்து போனான் சிறுவன்...

இந்த உயிரிழப்புக்கு குடிநீரே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், குடிநீர் வாரியம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மழைநீர் செல்வதற்கு இடையூறாக சுவர் கட்டியது, மற்றும் நீர் மட்டம் உயர்ந்து தெருவில் உள்ள வளாகத்தின் சம்ப்பில், கலந்தது தான் மாசு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது..

சுவற்றில் துளையிட்டு தேங்கிய நீரை வெளியேற்றியதாகவும் விளக்கம் அளித்திருந்தது குடிநீர் வாரியம்.. இந்த நிலையில் தான் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார் சென்னை மாகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியும் சென்றார்..

அப்போது காலாவதியான ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றை சிறுவன் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பா என்ற கோணத்தில் அங்கிருந்த கடைகளில் சோதனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியனும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நடந்தது குறித்து சோதனை மேற்கொண்டார். அப்போது மெட்ரோ தண்ணீரால் எந்த பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து பேசிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ், கேன் வாட்டரால் ஏற்பட்ட பாதிப்புகளே காரணம் என்றார்.

சிறுவன் குடித்த கேன் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ததில் சில மாறுதல்கள் தெரிய வந்துள்ளது என்றும்,

சம்பந்தப்பட்ட கேன் குடிநீர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..

மேலும் குடிநீரில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுக்கள் ஏதேனும் கலந்து உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்..

இதேபோல் சென்னை மாநகரம் முழுவதும் கேன் குடிநீர் வினியோகம் செய்பவர்கள் தரத்தை ஆய்வு செய்வோம் கூறினார்.

சிறுவனின் உடற்கூராய்வு முடிவுக்கு பின்னரே அவரின் மரணத்திற்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்றாலும் உயிர் காக்கும் தண்ணீர் ஒரு பிஞ்சின் உயிரை பறித்திருப்பது யாருக்கும் நேரக்கூடாத துயரம் தான்..

Tags:    

மேலும் செய்திகள்